Thursday, July 31, 2008

ம‌ன்னிப்பு

ம‌ர‌ண‌வாச‌லிலும்
ப‌கைவ‌னிட‌ம் ம‌ண்டியிட்ட‌தில்லை
மான‌ம் ம‌ர‌ணிக்கும்முன்
ம‌ரித்துப்போவான் ம‌ற‌த்த‌மிழ‌ன்
ஒரு கோழையிட‌ம் ம‌ண்டியிடுவ‌தா!

த‌மிழ்தாய் பெற்ற‌ வீர‌ம‌க்க‌ள் நாங்க‌ள்
த‌லையை த‌ந்தாயினும்
த‌ன்மான‌ம் காப்போம்

வாழ்ந்து வ‌ர‌லாறு ப‌டைத்தோம்
ச‌ற்றே புர‌ட்டிப்பார் அத‌ன் ஏடுக‌ளை
ம‌ண்டியிட்ட‌து யார்?
மாட்சிய‌டைந்த‌து யார்?
வீர‌சொர்க‌ம் யாரின் இருப்பிட‌ம்? என்று புரியும்
மான‌த்திற்காக ம‌றிப்ப‌வ‌ர்க‌ள் நாங்க‌ள்!

இழ‌ப்ப‌த‌ற்கு இருப்ப‌து உயிர் ம‌ட்டும்
காப்ப‌த‌ற்கு மான‌முண்டு!
அடைவ‌த‌ற்கு இல‌ட்சிய‌முண்டு!
வெல்வ‌த‌ற்கு நீயும் உண்டு.

காத்திரு !
எங்க‌ள் எழுச்சி தொலைவில்லை!
அழிவு உன் அருகிலுண்டு
உல‌க‌ம் எங்க‌ளிட‌ம் ம‌ண்டியிடும் நாள் தூர‌மில்லை!
என்ன‌ விலைகொடுத்தாலும்
சுவாசித்தே தீருவோம் சுத‌‌ந்திர‌க்காற்றை!

அவ‌ள்

ப‌னித்துளி பூக்க‌ளுட‌ன் விளையாடும் அதிகாலைப்பொழுதில்
கிழ‌க்கே சூரிய‌ன் சோம்ப‌ல் முறித்துக்கொண்டிருந்தான்
அள்ளி முடிந்த ஈர‌க்கூந்த‌லுட‌ன்
ப‌ச்சைப்ப‌ட்டாடை அணிந்த‌ தேவ‌தை எதிரில் வ‌ந்தாள்
அவ‌ள் கூந்த‌லிருந்து விழும் நீர்முத்துக்க‌ள்
ம‌ழைநீர் போல் பூமியை ந‌னைத்த‌து
பூக்க‌ளோ இம்முத்துக்க‌ள் வேண்டும் என்று
த‌லைநீட்டி பூமியில் விழாம‌ல் த‌டுத்துக்கொண்டிருந்தது
அட‌ர்ந்த‌ காரிருளில் ஏற்றிவைத்த‌ முழுநில‌வு போல்
நீ ஒற்றை செவ்வ‌ந்தி பூவை கொய்து சூடினாய்
அந்த பூ எத‌ற்காக பூமியில் இருந்த‌து என்ப‌தை உண‌ர்ந்து
உன் கூந்த‌லில் ஆன‌ந்த‌ தாண்ட‌வ‌மாடிய‌து
சூரிய‌னும் சிறிது த‌டுமாறிப்போனான்
ஆம்! முழுநில‌வு பிர‌காசிக்கும் போது சூரிய‌னுக்கு என்ன வேலை
நீயோ ! என்னை க‌ண்ட‌வுட‌ன்
மேக‌த்தினுள் ம‌றையும் நில‌வு போல் ம‌றைந்துவிட்டாய்
நானோ க‌ல‌ங்க‌ரை விள‌க்கு தேடும் க‌ப்ப‌லானேன்
தூர‌த்தில் என் க‌ல‌ங்க‌ரை விள‌க்கு புன்ன‌கை வீசிக்கொண்டிருந்தது
நான் சூரிய‌னையை க‌ண்ட‌ ப‌னித்துளிப்போல் க‌ரைந்துப்போனேன்

ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌த்தில்
ம‌ங்க‌ல‌மாய் குங்கும‌ம் இட்டு
மான் போல் துள்ளிவ‌ந்து
என் இத‌ய‌த்தில் நுழைந்த‌வ‌ளே
காற்றிட‌ம் என் காத‌லை சொல்லி தூது அனுப்பினேன்
ஆனால் காத‌லை சொல்லாத காற்று
உன் வாச‌னையை என் வீட்டில் நிர‌ப்பிப்போன‌து
அன்று முத‌ல் உன்னையே சுவாசிக்கிறேன்
நீரிட‌ம் என் காத‌லை க‌விதையாக்கி அனுப்பினேன்
க‌ட‌லில் க‌ல‌ந்த‌ நீர் அலையாகிவிட்ட‌து
உற்றுக்கேள் அலை சொல்லும் க‌விதையை
அதில் என் காத‌லிருக்கும்
ப‌சுவிட‌ம் உன்மேல் நான் கொண்ட‌
காத‌லை க‌தையாக்கிச்சொன்னேன்
அது அம்மா என்று அழைக்கும் குர‌ல் கேட்கிற‌தா
அத‌னிட‌ம் கேள்! சொல்லும் என் காத‌லை.

Wednesday, July 30, 2008

நன்றி

முத‌ல் முறை தத்தி த‌த்தி ந‌ட‌ந்தேன்
அம்மா வாழ்த்தினார்க‌ள்
ந‌ட‌க்க‌ க‌ற்றுக்கொண்டேன்

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன்
தாத்தா வாழ்த்தினார்
ஒட‌ க‌ற்றுக்கொண்டேன்

முத‌ல் நாள் ப‌ள்ளிக்கூட‌ம்
ஆசிரிய‌ர் வாழ்த்தினார்
ப‌டிக்க‌ க‌ற்றுக்கொண்டேன்

ம‌ண்ணில் இட்ட‌ விதை முளைத்த‌போது
அப்பா வாழ்த்தினார்
விடாமுய‌ற்சியை க‌ற்றுக்கொண்டேன்

தோல்வியில் துவ‌ண்டு போனேன்
ந‌ண்ப‌ர்க‌ள் வாழ்த்தினார்க‌ள்
தோல்வியை வெற்றியாக்க‌ க‌ற்றுக்கொண்டேன்

க‌விதை எழுதினேன்
நீங்க‌ள் வாழ்த்தியுள்ளீர்க‌ள்
இன்று தொட‌ங்குகிறேன் என் க‌விதை ப‌ய‌ண‌த்தை!

உங்க‌ள் வாழ்த்திலே
என் வ‌ள‌ர்ச்சி
உங்க‌ள் வாழ்த்துக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி!

உழவன் என்ற ஒரு வர்கம்

ஒரு கானி நில‌ம்
காலை முத‌ல் மாலை வ‌ரை
இடைவெளி இல்லாம‌ல் உழைக்கும் வ‌ர்க‌ம்
காவிரியில் நீரில்லை,
வங்கியில் க‌ட‌ன் இல்லை,
க‌டையில் உர‌மில்லை
எங்கும் இல்லை என்ற‌ வார்த்தை த‌விர‌‌ வேறில்லை
இவ‌ன் இன்னொருவ‌ன் ப‌சிக்காக உழைக்கும் ஒரு வ‌ர்க‌ம்

ம‌ழை பொய்த்து போனாலும்
சூரிய‌ன் எழாம‌ல் போனாலும்
இவ‌ன் உழைப்ப‌தை நிறுத்திய‌தில்லை!
விடிய‌லே இல்லாம‌ல் போன‌ இவ‌னுக்கு
நில‌மெல்லாம் நெல்லானாலும்
அவ‌னுக்கு பொங்க‌லுக்கு ம‌ட்டுமே அரிசி சாத‌ம்!

த‌லை நிமிர்ந்து வாழ‌வேண்டிய‌ ஒரு வ‌ர்க‌ம்
இன்று நிமிர‌ முடியாம‌லே போன‌து ஏன்?
அடிமையாய் த‌ன்னையே விற்று
த‌ன் வ‌ம்ச‌த்தின் ப‌சித்தீர்க்கும் ஒரு வ‌ர்க‌ம்

தொன்னூறு நாட்க‌ள் த‌ன் க‌ருவ‌றையில்
சும‌ந்த‌ த‌ன் குழ‌ந்தையை
பிர‌ச‌வித்த‌ அவ‌னுக்கு
எஞ்சிய‌து ப‌சி ம‌ட்டுமே!
க‌ண்க‌ள் நிறைய‌ ஏக்க‌த்துட‌ன்
கால‌மெல்லாம் இவ‌ன் உழைத்தாலும்
க‌டைசியில் கிடைப்ப‌து க‌ட‌ன் மட்டுமே!

விய‌ர்க்கும் விய‌ர்வையை
வ‌ய‌லுக்கு உர‌மாக்கி
இவ‌ன் விளைவித்த நெல்லுக்கு
கேட்ப‌தெல்லாம் நியாய‌மான விலை!
சொகுசு காரில் குளுகுளு அறையில்
ப‌சி என்ப‌தே அறியாம‌ல் இருக்கும் அதிகாரிக‌ளுக்கு
ஒட்டிய‌ வ‌யிறுட‌ன் உல‌ர்ந்த‌ நாக்குட‌ன்
இவ‌ன் எழுப்பும் கூக்குர‌ல் கேட்காம‌லே போன‌தில் விய‌ப்பில்லை

உழைக்கும் வ‌ர்க‌ம்
த‌ற்கொலையை ம‌ட்டுமே அறுவ‌டை செய்துகொண்டிருக்கிற‌து
அதிகார‌வ‌ர்க‌மே!
க‌ண்ணாடி கூண்டிலிருந்து வெளியே வாருங்க‌ள்
உழ‌வ‌னின் க‌ண்ணீர் துடைப்போம்
விளைநில‌ங்க‌ள் எல்லாம் சவ‌ நில‌ங்க‌ளாக மாறும் முன் தடுப்போம்!
முற்றுப்புள்ளி வைப்போம் உழ‌வ‌னின் கண்ணீருக்கு.
விடிய‌லை ம‌ற‌ந்து போன‌ அவ‌னுக்கு சூரிய‌னை ப‌ரிச‌ளிப்போம்!

சொந்தத்தை தொலைத்தவனின் அழுகுரல்

அதிகாலை! சேவ‌ல் துயில் எழுப்ப‌
அம்மா பாச‌த்துடன் த‌ந்த‌ ப‌ழைய‌ சாத‌ம் அமுத‌மாய் இருந்த‌து
அப்பாவுட‌ன் வ‌ய‌லுக்கு ந‌டைப‌ய‌ண‌ம்
தொட்டாச்சினுங்கியை தொட்டுக் கொண்டே!
வாய்க்கால் நீருட‌ன் ஒட்ட‌ ப‌ந்தைய‌ம்
எப்போதும் என‌து ந‌ண்ப‌ணே முந்துவான்
ஓடும் வாய்க்கால் நீரின் இன்னிசையில்
உற‌ங்கிய‌ நிமிடங்க‌ள் எத்த‌னை!
அப்பாவுட‌ன் ஏர்பிடித்து உழுத‌ த‌ருண‌ங்க‌ள் எங்கே!
அக்காவுட‌ன் த‌ட்டான் பிடித்து விளையாடிய‌ நாட்க‌ள் எத்த‌னை!
ப‌ள்ளிக்குச் சென்ற‌ இனிமையான சைக்கிள் ப‌ய‌ண‌ங்க‌ள்
ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்துண்ட‌ ம‌திய‌ உண‌வு
அக்காவுட‌ன் சென்ற‌ அழ‌கான கோவில்
சாமியை க‌ண்டு ப‌ய‌ந்த‌ நாட்க‌ள்
க‌விதையாய் இருந்த என் வாழ்க்கை
இன்று கால‌ம் கிழித்துப்போட்ட‌ காகித‌மாகிப்போன‌து ஏன்?

இன்று க‌ணிப்பொறியுட‌ன் வாழ்க்கை
கைநிறைய‌ ப‌ண‌ம் இருந்தும்
ம‌ன‌ம் நிறைய‌ ம‌கிழ்ச்சி இல்லை!
எல்லா உண‌வ‌க‌த்திலும் தேடுகிறேன்
என‌து அம்மா த‌ந்த‌ ப‌ழைய‌ சாத‌த்தை!
தொலைவில் இருந்தா‌லும் அவ்வ‌ப்போது
பேசி ந‌ல‌ம்விசாரிக்கும் கண‌மான தொலைபேசி த‌ருண‌ங்க‌ள்!
பேசிய‌ பிற‌கு துளிர்க்கும் க‌ண்ணீருட‌ன் சென்ற‌ அலுவ‌ல‌க‌ம்!
விடுமுறையை எண்ணிக் கொண்டே செய்யும் வேலைக‌ள்!
நாட்குறிப்பில் க‌ண்ணீருட‌ன் எழுதிய‌
அக்காவின் பிற‌ந்த‌ நாள்!
அம்மா அப்பாவின் திரும‌ண‌ நாள்!
சொந்த‌த்தை தொலைத்த‌வ‌னின் அழுகுர‌ல்
இந்த‌ நக‌ர‌த்தின் ச‌த்த‌த்தில் யாருக்கும் கேட்காம‌லே போன‌து ஏன்?

இயற்கையின் மொழி

மாலை சூரிய‌ன் நீல‌வான‌த்தில்
ம‌ஞ்ச‌ள் பூசிகொண்டிருந்தான்
அழ‌கான‌ ஆற்ற‌ங்க‌ரை,
அத‌ன் மீது கொண்ட‌ காத‌லால்
அதை எப்போதும் தொட்டுக்கொண்டிருந்த‌ ம‌ர‌ம்
அருகில் என்ன‌வ‌ள் என‌க்காக‌
புல்லாங்குழ‌ல் வாசித்துக்கொண்டிருந்தாள்!

முத‌ன்முத‌ல்!
உயிரின் நாத‌ம் கேட்டேன்!
அழ‌கான‌ இய‌ற்கையின்
இனிமையான‌ மொழி கேட்டேன்!
என்றும் ஆர‌வார‌த்துட‌ன் ஒடும் ஆறு
உன் குழ‌லின் இசை கேட்க‌ அமைதியான‌து!
தூர‌த்தே பாடின‌ குயிலும்
அத‌ன் த‌லைவியின் குழ‌ல் ஒலிகேட்டு அமைதியான‌து!

உன் குழ‌லின் இசையால்
என் ஜீவ‌னை க‌ரைத்துக்கொண்டிருந்தாய்!
நான் மெய் ம‌ற‌ந்து நின்றேன்
காற்றும் நின்று போன‌து
எத்த‌னை யுக‌ங்க‌ள் க‌ட‌ந்துபோன‌து
எண்ண‌வும் ம‌ற‌ந்துபோனேன்
முடிவில் என்னையும் ம‌ற‌ந்துபோனேன்!


நீ உயிர் கொண்டு இசைத்துக்கொண்டிருந்தாய்
அது உயிர்க‌ளை அசைத்துக்கொண்டிருந்தது
முடிவில் இசைப்ப‌தை நிறுத்தினாய்
நான் பூமியில் பிற‌ந்தேன் மீண்டும்
இந்த‌ இசை உன் மூச்சின் ஒலியா?
இல்லை மூங்கிலின் ஒலியா? என்ற‌ கேள்வியுட‌ன்
நீ எந்த‌ புல்லாங்குழ‌லை இசைத்தாலும் இசை ஒன்றே!
விடை உன் மூச்சின் ஒலி என்றேன்.
சூரிய‌ரின் சிவ‌க்கும் நேர‌த்தில்
சுட்ட‌ தங்க‌ம் போல்
உன் க‌ண்ண‌ங்க‌ள் சிவ‌ந்த‌ன‌ வெட்க‌த்தில்
உன் ம‌டியில் த‌லைசாய்த்தேன்
" அருகில் நின்றிருந்த‌ ஆறு
என்மேல் பொறாமை கொண்டு வேக‌மாய் ஒடிய‌து!
சூரிய‌னுக்கும் பொறாமை என்மேல்
சீக்கிர‌ம் ம‌றைந்து போனான் " என்றேன்
செல்ல‌மாய் கோப‌ப்ப‌ட்டாய் !
க‌ள்ளி! நீயும் காத‌லிக்க‌ க‌ற்றுக்கொண்டாய் .........

என் கிராமம்

காவிரியின் க‌ரையில் ந‌ட‌ந்து கொண்டிருந்தேன்
உழ‌வ‌ர்க‌ளின் உழைப்பு நில‌த்தில் தெரிந்த‌து
நில‌ம‌க‌ளுக்கு ப‌ச்சைப‌ட்டாடை அணிவித்திருந்தார்க‌ள்
க‌ரையோர‌ ம‌ர‌ங்க‌ளின் ந‌ன்றி
அவை செறிந்த‌ பூக்க‌ளில் தெரிந்த‌து
ப‌ன்னீர் ம‌ர‌ங்க‌ளின் த‌ய‌வால்
ப‌ன்னீர் சென்று கொண்டிருந்த‌து காவிரியில்
நீரில் கால் ந‌னைத்து நின்றேன்
காவிரில் மோதிய‌ காற்று
ப‌ன்னீரை தெளித்துபோன‌து முக‌த்தில்
காவிரி நீர் கொண்டு வ‌ள‌ர்ப்ப‌தால் தான்
எங்க‌ள் க‌ரும்பும் ப‌ன்னீராய் இனிக்கிற‌து

த‌லை சாய்த்து நின்ற‌ என் நெல் ந‌ண்ப‌ன்
என் வ‌ருகையை த‌லையாட்டி வ‌ர‌வேற்றான்
என் இர‌க‌சிய‌ சிநேகித‌ன் இர‌யில்
கூக்குர‌லிட்டு சென்றான்
நான் ஒடிவிளையாடிய‌ வாய்க்காலில்
என்னை க‌ண்ட‌தும் துள்ளி ஒடிய‌து நீர்
நீல‌வான‌த்தில் இட்ட‌ குங்குமமாய்
மாலை சூரிய‌ன் ம‌ங்க‌ல‌மாய் இருந்தான்
அல்லியும் தாம‌ரையும் துள்ளி விளையாடும் த‌டாக‌ம்
அத‌ன் அருகில் நிற்ப‌தே சுக‌ம்
நான் நீச்ச‌ல் ப‌ழ‌கிய‌ குள‌மே சுக‌மா என்றேன்?
மீன்க‌ள் துள்ளி குதித்த‌து
அல்லியும் தாம‌ரையும் த‌லையாட்டி சுக‌மென்ற‌து.

என் எல்லா வ‌ர‌ங்க‌ளையும் த‌ந்த‌
எல்லைசாமி த‌னியாக‌ இருந்தார்
விழுந்து கும்பிட்டேன் என் சாமியை
எங்க‌ளையும், நில‌த்தையும் காத்த‌ற்காக‌
எட்டு வ‌ருட‌ங்க‌ள் உங்க‌ளை பிரிந்து
ந‌க‌ர‌ம் என்ற‌ ந‌ரக‌‌த்தில் இருந்தேன்
இன்று
தாய் தேடி ஒடி வ‌ரும் க‌ன்று போல்
உன்னைத்தேடி ஒடிவ‌ருகிறேன்
மீண்டும் உன் ம‌டியில் ஒர் இட‌ம் கிடைக்குமா ?
என் கிராம‌மே!

நண்பர்கள்

தேர்கால் சிக்கிய‌ க‌ர்ண‌னை
காப்பாற்ற‌ ந‌ண்ப‌ன் இல்லை அங்கு
நான் சிக்குண்ட‌ எல்லா த‌ருண‌ங்க‌ளிலும்
என் ந‌ண்ப‌ர்க‌ள் நின்றார்க‌ள் தோளோடு தோளாக‌
த‌ந்தையின் நிழ‌லிருந்து த‌னித்து வ‌ந்தேன்
கல்லூரி என்னும் பாட‌ம் க‌ற்க‌
த‌னியான நான், உங்க‌ளுட‌ன் சேர்த்த‌ உற‌வுதான்
எவ்வ‌ள‌வு புனித‌மான‌து !

என‌க்கு!
த‌ந்தையானீர்க‌ள் நான் பாதை த‌வ‌றிய‌ போது
தாயானீர்க‌ள் நான் ப‌சிய‌றிந்த‌ போது
பாச‌த்தை பொழிந்த‌போது உட‌ன்பிற‌ந்த‌வ‌ர்க‌ளானீர்க‌ள்
நாம் எல்லாம் ப‌கிர்ந்தோம்
நம் சோக‌மும் ப‌சியும் முத‌ற்கொண்டு!

எதிர்கால‌ ஏக்க‌ம் நிர‌ம்பிய‌ க‌ண்க‌ளுட‌ன்
நாம் ப‌கிர்ந்த‌ இர‌வுக‌ள் எத்த‌னை
அப்ப‌டி எத்த‌னை தூங்கா இர‌வுக‌ள்
ந‌ம் க‌ல்லூரி நாட்க‌ளில்
இன்று எல்லாம் இருந்தும்
அந்த‌ இர‌வுக‌ள் இல்லை என்னிட‌ம்
உங்க‌ளுட‌ன் மீண்டும் வாழும் அந்த‌ இர‌வுக்கான‌
ஏக்க‌ம் ம‌ட்டும் என் க‌ண்க‌ளில்!

எழுப்ப‌ச்சொல்லி உற‌ங்கிய‌ ந‌ண்ப‌னை
எழுப்பிய‌போது அவ‌ன் திட்டிய‌தும் சுக‌ம்
ஒரே பாட‌லுட‌ன் நாம் ப‌ய‌ணித்த‌
பேருந்து ப‌ய‌ண‌ங்க‌ள் தான் எவ்வ‌ள‌வு இனிமை
அந்த‌ ப‌ய‌ண‌ச்சீட்டு தொலைந்து போனாலும்
ப‌ய‌ண‌ங்க‌ள் தொலைய‌வில்லை என்னிட‌ம் !


எத்த‌னை எதிர்பார்பில்லா ந‌ண்ப‌ர்க‌ள் என‌க்கு
ஆம் !
கால‌ம் சுழ‌ன்று பிரியும் நிலையில்
நாம் அழுத‌ க‌ண்ணீருக்கும், வ‌லிக்கும் விலையேது
அதில் க‌ல‌ங்க‌ம் தான் ஏது?
கால‌த்தையும் வென்று நாம் இணைந்து தேடிய‌ வேலைக‌ள் எவ்வ‌ள‌வு
ஒவ்வொரு தேட‌லின் முடிவும் துக்க‌மான‌ தோல்வியாகிய‌து
நீங்க‌ள்தான் அந்த‌ துக்க‌த்தையும் ச‌ந்தோஷ‌மாக்கிய‌து!
ஆராத‌ ர‌ண‌த்தையும் ஆற்றினீர்க‌ள் உங்க‌ள் வார்த்தையால்
உங்க‌ளால் வென்று வ‌ந்தேன் வேலையை!
நீங்க‌ள் இல்லையெனில் துக்க‌மே தூக்க‌ முடியா சுமையாயிருக்கும்!


எனக்காக‌ நீங்க‌ள் காத்திருந்த‌ இர‌வுக‌ள் எத்த‌னை
இன்று எல்லாமிருந்தும் காத்திருக்கும் ந‌ண்ப‌னில்லை
திரைக்க‌ட‌ல் தாண்டி திர‌விய‌ம் தேட‌வ‌ந்தேன்
உட‌ல் ம‌ட்டும் வ‌ந்த‌து! ம‌ன‌ம் வ‌ர‌வில்லை!
ஒவ்வொரு ஞாயிற்று கிழ‌மைக்காக‌வும் காத்திருக்கிறேன் நான்
என் செல்பேசி காத்திருக்கிற‌து உங்க‌ளின் அழைப்பிற்காக‌!


திருக்குற‌ளானோம் நாம்
நீங்க‌ளின்றி நானில்லை !
நீங்க‌ளின்றி பொருளில்லை!
ந‌ன்றி என் ந‌ண‌ப‌ர்க‌ளே!
என்னை நானாக்கிய‌த‌ற்கு.

குழ‌ந்தை

ரோஜாவை விட‌ மென்மையான பாத‌ம்
அவை நெஞ்சில் ப‌டுவ‌தே சுக‌ம்
த‌த்தி த‌த்தி ந‌ட‌க்கும் ந‌டை
என் இத‌ய‌த்தை த‌ட்டி த‌ட்டிச் செல்லும்
மிண்மிணி பூச்சிக‌ளாய் க‌ண்க‌ள்
ஆனால் ஓளியோ ந‌ட்ச‌த்திற்கு ஒப்பான‌து
உங்க‌ள் முத்த‌த்திற்காக‌
என் தாடியையும் தான‌ம் செய்தேன்
உங்க‌ள் ச‌வாரிக்காக‌
நான் யானையாகி ம‌கிழ்தேன்
உங்க‌ளை சும‌ப்ப‌த‌ற்காக‌வே
என் தோள்க‌ள் ப‌டைக்கப்ப‌ட்ட‌ன‌
உங்க‌ள் வ‌ருகையால்
நிர‌ம்பிய‌ நெற்க‌ள‌ஞ்சிய‌மான‌து என‌து வீடு
நீங்க‌ள் த‌லைசாய்த்து பார்க்கும்போது
என் உயிரில் புது ஜீவ‌ன் ஊற்றெடுக்கும்
ம‌ழ‌லையாய் மாமா என்ற‌ழைக்கும்
த‌ருண‌த்திற்காக‌வே த‌வ‌மிருக்கிறேன்
நீங்க‌ள் பூவாய் சிரிப்ப‌த‌ற்காக‌
அதில் ஊற்றும் நீராய் மாறுவேன்!
உங்க‌ள் க‌ல‌ங்க‌மில்லா சிரிப்பு
என் இத‌ய‌த்தில் தேவ‌கான‌மாய் என்றென்றும் ஒலிக்கும்!
உங்க‌ளால் நானும் இன்று
குழ‌ந்தையாகிப்போனேன்.

அதிகாலை

பூக்க‌ளில் ப‌ட‌ர்ந்திருக்கும் ப‌னிபோல்
உன் கூந்த‌லிருந்து விழும் நீர்!
ம‌ஞ்ச‌ள் பூசிய முக‌ம்
என் எதிரில் நில‌வை நிறுத்தும்!
அதில் ஏற்றிவைத்த‌ அக‌ல் விள‌க்கு போல்
உன் நெற்றியில் இட்ட‌ குங்கும‌ம்!
ப‌ட்டை வ‌ருடிப்போகும் இற‌கு
நீ உடுத்தி இருக்கும் புட‌வை
பூமிக்கு வ‌லிக்காமல் ந‌ட‌க்கும்
அன்ன‌ம் போன்ற‌ ந‌டை!
யாழின் இசைப்போல் ஒலிக்கும்
உன் கொலுசின் முத்துக்க‌ள்
என்னை தீண்டும் ப‌ஞ்சையொத்த‌ விர‌ல்க‌ள்
அதைவிட‌ மென்மை எங்குமில்லை!
எட்டாவ‌து சுவ‌ர‌மாய் ஒலிக்கும்
உன் குர‌ல்!
செல்லமாய் கோப‌ப்ப‌டும்போது
அழ‌காய் சிவ‌க்கும் க‌ண்ண‌ங்க‌ள் !
நீர்சுழலாய் க‌ண்ண‌த்தில் விழும் குழி
அதில் விழுந்த‌ என‌க்கு எழ‌ ம‌ன‌மில்லை!
இவ்வ‌ள‌வும் நீ துகில் எழுப்பும் ம‌ட்டுமே கிடைக்கிற‌து
நீ இன்னெறுமுறை எழுப்ப‌வேண்டுமென்றே
மீண்டும் உற‌ங்குகிறேன்!
மீண்டும் உன் அழ‌கை இர‌சிப்ப‌த‌ற்கு!

போர்களத்திலிருந்து ஒர் கடிதம்

காலைக்கதிரவனாய் எழுந்து
எனக்காக சமைத்துக்கொண்டிருந்தாய்
தூதுவன் வந்து ஒலையை தந்துபோனான்
"காவலுக்கு ஆளில்லை! காற்றுக்கு முன் வா!
தாய்நாட்டின் மானம் காக்க வா ! " என்று
கலங்கா நெஞ்சுடன் அழாத கண்களுடன்
என்னை வழியனுப்பிவைத்தாய்

கண்ணே!
இங்கு உன் தும்பை பூ நெஞ்சம் போல் எங்கும் பனிபடர்ந்த மலைகள்!
நீ ஒருநாள் கதிரவனை சபித்துக்கொண்டிருந்தாய்
அது பனித்துளிகளை அழித்தற்காக.
இங்கு ஆயிரம் பனிமலைகள்
ஆதவனை மறைத்துவிட்டன.
உன் சாபம் பலித்துவிட்டது.

உன்னைப்போல் என் எதிரிக்கும் மனைவியிருப்பாள்
ஆனால்! என் தாயை திருட நினைப்பவன் மேல்
கருணையும் காணாமல்போகிறது
கதிரவன் மறையும் தருணத்தில்
செங்குருதி நிரப்பிய நிலத்தைக் கண்டேன்
அது, ஆதவன் ஒளியால் அல்ல
அந்நியன் நுழைந்தால் கலங்கிப்போன என் தாயை
அவன் செங்குருதியால் மகிழ்வித்ததால்!

வலியால் நீ அழுதபோது
கைகொண்டு உன் கண்ணீர் துடைக்காமல்
தாய் நாட்டின் மானம் காக்க வந்தேன்
உன் வலி என்னில் ஆரா ரணமாகிப்போனது
மன்னித்து விடு கண்ணே!
கடமை அழைத்ததால் காவலுக்கு வந்தேன்
வெற்றியுடன் வருவேன்
தாய் நாட்டின் கலங்கம் துடைத்து
உன் கண்ணீர் துடைக்க

நேற்று கடவுள் கனவில் வந்தார்
போர்களத்தில் வீழும் தருவாயில்
என் மனைவின் மடியில் உயிர்விடவேண்டுமென்ற
வரம் கேட்டேன். தந்து போனார்.
அவரிடம் கேட்க மறந்துபோனதை
உன்னிடம் கேட்கிறேன்
" நான் காணும் கடைசி காட்சி
முழுமதியாய் புன்னகை நிரம்பிய உன்முகமாக வேண்டும்.
நான் கேட்கும் கடைசி செய்தி
தாய்நாட்டின் வெற்றியாக வேண்டும்"
விரத்துடன் வழியனுப்பிவை
மாண்டு போனாலும் உன் கருவரையில்
மகனாய் பிறப்பேன்
போர்களத்தில் வீரத்துடன் போரிட்டு மடிந்தவர்கள்
வீரச்சொர்கம் அடைவார்கள்
என் சொர்கம் உன் கருவறையே
காத்திரு கண்மணி!
வெற்றியுடன் வீரத்திருமகனாய் வருவேன்
இல்லை ! உன் வயிற்றில் வீரமகனாய் பிறப்பேன்.

புர‌ட்சி

நாங்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டிருக்கிறோம்!
எங்க‌ள் கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து!
அடையாள‌ம் அழிக்க‌ப்ப‌டுகிற‌து !
வாழ்கை பூவில்லா பூங்காவான‌து
இடியென‌ முழங்கும் வெடிக‌ளின் ச‌த்த‌ம் தாலாட்டான‌து
சொந்த‌ ம‌ண்ணில் அநாதையாக்க‌ப்ப‌ட்டோம்
எவ்வ‌ள‌வு இர‌த்த‌ம் சிந்தியும்
சுக‌ந்திர‌ தாக‌ம் ம‌ட்டும் த‌ணிய‌வில்லை!
எம்ம‌க்க‌ள் க‌ண்ணிர் துடைக்கும் கைக‌ள் எங்கே ?
காய்க‌ள் விளைய‌வேண்டிய‌ நில‌த்தில்
க‌ந்த‌க‌த்தை விதைத்துப்போன‌து யார்?
அன்று ம‌கிந்த‌னை வென்ற‌ சோழ‌ன்
இன்று இல்லாம‌ல் போன‌து ஏன்?
எங்க‌ளை கொன்று புதைக்காம‌ல் விதைத்திருக்கிறார்க‌ள்!
நாங்க‌ள் மீண்டும் முலைப்போம்!
மீண்டும் சுக‌ந்திர‌ச் செடிக்கு உர‌மாவோம்!
த‌டைக‌ளை த‌க‌ர்ப்போம்
ந‌ம் கைகொண்டு ந‌ம் க‌ண்ணிர் துடைப்போம்!
ஏட்டிலிருந்த‌ த‌மிழ‌னின் வீர‌ம் இன்று வீட்டில் இருக்க‌ட்டும் !
வ‌ந்தோரை வாழ‌வைக்கும் த‌மிழ‌ன்
இன்று ஏன் த‌ன் இன‌ம் காக்க‌ ம‌ற‌ந்துபோனான்
நாம் ஏன் ஒருதாய் வ‌யிற்று ம‌க்க‌ள் என்ப‌தை ம‌ற‌ந்துபோனோம்?
அற‌ம்,வீர‌ம்,காத‌லை உல‌கிற்கு த‌ந்த‌ இன‌ம்
இன்று அழிந்துகொண்டிருக்கிற‌து
புற‌ப்ப‌டுங்க‌ள் தோழ‌ர்க‌ளே!
சுக‌ந்திர‌ காற்றை சுவைக்கும் வ‌ரை
இமை மூடாதிருப்போம்!
ஒடுங்கிய‌ கைக‌ள் ஓங்கும் போது
அது விண்ணையே முட்டும்!
நம் இர‌த்த‌ம் கொண்டு
எழுதுவோம் த‌மிழ‌னின் புதிய‌ வ‌ர‌லாறு.


(see the below picture)

வெற்றி

தோல்வியின் அடுத்த ப‌டியில் வெற்றி
துவ‌ண்டு விடோம் தோல்வியில்
துணிந்து முன்னெறுவோம்!
இனி எடுத்து வைக்கும் அடுத்த அடி
வெற்றியின் நெற்றியில்
முலைக்கும் விதையிலிருந்து க‌ற்றோம் முய‌ற்சியை
க‌டிகார‌த்திலிருந்து க‌ற்றோம் க‌டின‌ உழைப்பு
உண‌ர்ந்துகொள்வோம்! பூமியும் ந‌ம‌து கால‌டியில்.

தோல்வி எனும் காட்டாறு எதிர்ப‌ட்டால்!
அதில் ஒடும் க‌ப்ப‌லாவோம்!
இன்று ஆற்றில் ப‌ய‌ணித்தாலும்
முடிவில் அடைவ‌து வெற்றி எனும் மகாச‌முத்திர‌ம்!
தோல்வி எனும் நெருப்பில் சாம்ப‌லாக‌ மாட்டோம்
அதை வெற்றிக்கு வ‌ழிகாட்ட‌ எடுத்துக் கொள்வோம்!

இன்று சூளுரைப்போம் நாம்‍-
பிடிக்க‌ முடியா காற்றாவோம்!
ம‌றைக்க‌ முடியா ஆத‌வ‌னாவோம்!
எழுந்தால் அலையாவோம்!
அலையானால் சுனாமியாவோம்!
எரிந்தால் எரிம‌லையாவோம்!
எழுத்தானால் க‌ல்வெட்டாவோம்!
விழுந்தால் வெற்றியின் விதையாவோம்!
விதையிலிருந்து எழும் விருட்ச‌மாவோம்!
தூக்க‌த்தை தூக்கிலேற்றுவோம்!
எதிர்ப‌டும் த‌டைக‌ளை த‌க‌ர்த்தெறிவோம்!
முடிவில் தோல்விக்கு தோல்வியை ப‌ரிச‌ளிப்போம் !